உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ளன.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து விருத்தாசலம், வேப்பூர், தொழுதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 335 தொழிலாளர்கள் வருகை புரிந்தனர். அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவின்பேரில், அரசு கல்லூரி விடுதிகள் மற்றும் கல்லூரி இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு 14 நாட்கள் முடிவடைந்ததையடுத்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 212 பேருக்கு தொற்று இல்லாததால் முதற்கட்டமாக விருதாசலம், வேப்பூர், தொழுதூர் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 212 நபர்கள் இன்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
வீடு திரும்பிய தொழிலாளிகளுக்கு சார் ஆட்சியர் பிரவீன்குமார் அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி, வீட்டிற்கு சென்றபின் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், எக்காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். வீடு செல்லும் தொழிலாளர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தி கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் வட்டாட்சியர் கவியரசு, மற்றும் இதர துறை அதிகாரிகள் இருந்தனர்.