![vellore, tiruvannamalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/TuvwqX9z1dQt1RrlBNaa1sr2w1KPOlIiSH0li5tC4ME/1533347686/sites/default/files/inline-images/vellore%2C%20tiruvannamalai%20501.jpg)
திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அடுத்த அத்திமூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்குமணி, பல்லாவரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், மலேசியாவைச் சேர்ந்த சந்திரசேகரன், அதே மலேசியாவைச் சேர்ந்த மோகன்குமார் (இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்), மயிலாப்பூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கஜேந்திரன் ஆகிய 5 பேரும் டாடா இண்டிகா காரில் கோவிலுக்கு வந்தனர்.
அப்போது வழி தெரியாமல் அத்திமூரில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் முகவரி விசாரித்துள்ளனர். நீங்கள் வந்த வழியிலேயே அந்த கோவில் உள்ளது என கூறியுள்ளனர். வழி விசாரிக்கும்போது அங்கிருந்த சில குழந்தைகள் இவர்களது கார் அருகே ஓடிவர, ருக்குமணி என்ற பெண் காருக்குள் இருந்தபடியே குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்துள்ளார். பின்னர் காரும் புறப்பட்டு சென்றுவிட்டது.
![vellore, tiruvannamalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/2pgjkuSQGWmaIdrlZBGlczv_FOY-hGlhe5y0Qk3DEOU/1533347686/sites/default/files/inline-images/vellore%2C%20tiruvannamalai%20502.jpg)
அத்திமூர் கிராமத்திற்குள் இவர்களது கார் வந்தபோது, காரை மடக்கிய அந்த ஊரைச் சேர்ந்த சுமார் 20 பேர், குழந்தையை கடத்த வந்தவர்கள் நீங்கள்தானே என கேட்க, காருக்குள் இருந்தவர்களோ நாங்கள் கோவிலுக்கு வந்துள்ளோம் என கூறியுள்ளனர். இல்லை நீங்கள் குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து கடத்த முயற்சித்திருக்கிறீர்கள் என கூறி அவர்கள் அடிக்க துவங்கியுள்ளனர்.
குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என தகவல்கள் பரவ அந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு வந்து முறையாக எதையும் விசாரிக்காமல் அவர்களும் அடித்து, உதைக்க துவங்கினர்.
இந்த தகவல் போளுர் காவல்நிலையத்திற்கு செல்ல அங்கிருந்து 2 எஸ்.எஸ்.ஐ.க்கள், 3 போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை விலக்கிவிட்டு அவர்களை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் பொதுமக்கள் நிறுத்தாமல் அடித்து உதைத்துள்ளனர்.
![vellore, tiruvannamalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/j-piKOQHT27kIJg8_Bz76yNLlrsII1Jp4IIs84j4Pd4/1533347686/sites/default/files/inline-images/vellore%2C%20tiruvannamalai%20503.jpg)
இறுதியில் 11.45 மணிக்கு போலீசார் அந்த 5 பேரையும் மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 12.10 மணி அளவில் 65 வயதான ருக்குமணி இறந்துள்ளார். கார் ஓட்டுநர் கஜேந்திரன், சந்திரசேகரன் இருவருக்கும் பலத்த காயம் என்பதால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மோகன் குமார் மற்றும் வெங்கடேசன் இருவரையும் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். கஜேந்திரன், சந்திரசேகர் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
![vellore, tiruvannamalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/F0slSYupxwcPp4hX59lPiJM0GSKEb1UWQa-E30z3cfE/1533347686/sites/default/files/inline-images/vellore%2C%20tiruvannamalai%20504.jpg)
தற்போது அந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். யார், யார் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என விசாரித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கோவிலுக்கு வந்தவர்களை குழந்தைகள் கடத்த வந்தார்கள் என நினைத்து தாக்கியதில் ஒரு உயிர் பலியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்து வந்தன. வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என ஊருக்குள் வருபவர்களை எதுவும் விசாரிக்காமல் தாக்குகின்றனர்.
இதேபோன்று அண்மையில் வேலூர் பாகாயத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, குழந்தைகளை கடத்த வந்தவர் என நினைத்து அடித்து உதைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் அப்பாவி மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்ததால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வேலூர் எஸ்.பி. பகலவன், சந்தேகம் என வந்தால் பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுங்கள். அடித்து, உதைக்காதீர்கள் என கூறியிருந்தார். இதுபோன்ற சம்பவங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தும், பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தவில்லை. இதனால் தற்போது ஒரு உயிர் பலியாகி உள்ளது.