கரூர் மாவட்டம் க.பரமத்தியில் நீதிமன்ற உத்தரவுடன் மாஜி அமைச்சரும் தினகரன் அணியை சேர்ந்த செந்தில்பாலாஜி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
![fasting](http://image.nakkheeran.in/cdn/farfuture/iKpIyN5EUU0IOHuKKxR3H2Z-MFk-8S_arshEhc4KA5g/1538327782/sites/default/files/inline-images/Ka_Swn%20%282%29.jpg)
கடந்த சட்டசபை தேர்தலி்ல் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு செந்தில்பாலாஜி வெற்றி பெற்றார். தற்போது அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அந்த தேர்தலின் போது தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ என்ற காரணம் கூறி தமிழக அரசு தொடர்ந்து அரவக்குறிச்சியை புறக்கணிப்பதாக கூறி செந்தில் பாலாஜி தற்போது க.பரமத்தியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். தொகுதி பொதுமக்கள் கலந்து கொள்ளும் இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்க 3 முறை காவல்துறை மறுத்தது. தொடர்ந்து செந்தில் பாலாஜி மதுரை மற்றும் சென்னை உயர்நீதி மன்றங்களை அணுகி அனுமதி பெற்றார்.
![fasting](http://image.nakkheeran.in/cdn/farfuture/0kEjlII05DGx1JxmvIB5GlW3RPS2yjmjavSq2uu7414/1538327810/sites/default/files/inline-images/Ka_Swn%20%283%29.jpg)
இந்நிலையில் உண்ணாவிரதம் நடைபெறும் க.பரமத்திக்கு நேற்று மாலை 3 மணியளவில் கரூர் மாவட்டக் கலெக்டர் அன்பழகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர். உண்ணாவிரத பந்தல் பகுதியில் அங்கும் இங்கும் சென்ற அவர்கள் சுமார் அரைமணி நேரம் பார்வையிட்டு விட்டு சென்றனர். கலெக்டர் நேரடியாக வந்து பார்வையிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது உண்ணாவிரதத்தை தடுக்கும் முயற்சியே என்று செந்தில்பாலாஜி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் திட்டமிட்டபடி செந்தில் பாலாஜி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இதில் தொகுதி பொதுமக்கள், அமமுகவினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பிரமாண்ட பந்தல் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு பொதுமக்கள் அளித்துள்ள பெரும் ஆதரவு ஆளுங்கட்சி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு நாள் நடக்கும் நிகழ்ச்சியன்று இவ்வளவு பெரிய பிரமாண்ட உண்ணாரவிரதம் நடத்தியது. பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.