Skip to main content

தீபாவளி சீட்டு நடத்தி 17 லட்சம் ரூபாய் மோசடி! ஒருவர் கைது!

Published on 08/06/2022 | Edited on 08/06/2022


 

17 lakh rupees fraud by conducting Deepavali tickets! One arrested!

 

தர்மபுரி அருகே, தீபாவளி சீட்டு நடத்தி 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆசாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

தர்மபுரி குமாரசாமிப்பேட்டையைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 42). இவருடைய மனைவி ஷியாமளா. இவர்கள் தீபாவளி பலகார சீட்டு திட்டங்களை நடத்தி வந்தனர். இவர்களிடம், குமாரசாமிப்பேட்டை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராஜா என்பவருடைய மனைவி சுமி (வயது 32), சீட்டு போட்டிருந்தார். உள்ளூரைச் சேர்ந்த 100- க்கும் மேற்பட்டோர் மணிவண்ணன் தம்பதியிடம் சீட்டுப் போட்டுள்ளனர்.

 

சீட்டுத் திட்டத்தில் சேர்ந்த உறுப்பினர்கள் மாதந்தோறும் 1,500 ரூபாய் செலுத்த வேண்டும். சீட்டுத்திட்ட உறுப்பினர்களுக்கு தீபாவளி பண்டிகையின்போது தலா ஒரு கிலோ இனிப்பு, காரம் வழங்கி வந்துள்ளனர். அத்துடன், முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப தங்க நாணயமும் பரிசாக வழங்கியுள்ளனர். 

 

தற்போது தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், தங்க நாணயத்திற்கு பதிலாக முதலீட்டுத் தொகையைத் திருப்பிக் கொடுத்து விடுவதாக மணிவண்ணன் கூறியுள்ளார். ஆனால், அவர் சொன்னபடி பணமோ தங்கமோ திருப்பித் தரவில்லை. 

 

இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், தர்மபுரி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மணிவண்ணனை ஜூன் 6- ஆம் தேதி கைது செய்தனர். அவர் முதலீட்டாளர்களிடம் இருந்து 17 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்