நாகை மாவட்டம், சீர்காழி சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் பாரதியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க. மீது திட்டமிட்டு ஊழல் குற்றச்சாட்டு பரப்புகிறார் ஸ்டாலின். அ.தி.மு.க. அரசு மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என அவதூறான செய்தியைப் பரப்பி வருகிறார். மக்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் ஆதரவு கொடுத்ததால் நான் முதலமைச்சர் ஆனேன். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் மக்களுக்காகப் பேசாமல் அமளியில் ஈடுபடுகின்றனர். ஸ்டாலினின் குடும்பத்தைத் தவிர தி.மு.க.வில் வேறு யாரும் பதவிக்கு வர முடியாது.
தி.மு.க. நாட்டு மக்களுக்காக உழைக்காமல் வீட்டு மக்களுக்காக உழைக்கிறது. தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தி.மு.க.வின் ஊழல் வழக்குகளை மறைக்கவே அ.தி.மு.க. அரசு மீது ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார். கட்சிப் பணிக்கு வாரிசு வருவதில் தவறில்லை; ஆனால் கட்சியையே வாரிசுக்குக் கொடுப்பதுதான் திமுக. அதிமுகவிலும் வாரிசு அரசியல் உண்டு என்பது உண்மைதான்; ஆனால் வித்தியாசம் உண்டு" என்றார்.
வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரத்தால் தமிழக சட்டப்பேரவையின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.