தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் இன்று (26-11-24) அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை (27-11-24) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்பதால், சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்செந்தூரில் கடல் சுமார் 80 அடி நீளத்திற்கு உள்வாங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை பச்சை படிந்த பாசிகள் இதனால் வெளியே தெரியும் அளவிற்கு கடல் நீர் உள்வாங்கி உள்ளது. கடல் நீர் உள்வாங்கி இருக்கும் நிலையில் ஆபத்தை உணராமல் அங்கு கூடியுள்ள சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுத்து வருகின்றனர். ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் கடல் பகுதிகளில் சீற்றம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்திஇருந்தது. இந்நிலையில் தற்போது திருச்செந்தூர் பகுதியில் கடல் நீர் உள்வாங்கி உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் கடல் பகுதியில் உலாவி வருவது குறிப்பிடத்தக்கது.