தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18,19 ஆகிய தேதிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் கூடிய சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இந்த அரசு தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 68ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீடும் 2 லட்சத்து 5ஆயிரத்து 802 நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சிக்காக இவ்வளவு முயற்சிகள் எடுத்துள்ள இந்த அரசின் சார்பில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்றேன். துபாயில் நடைபெற்ற கண்காட்சியில் தமிழ்நாட்டுக்கான அரங்கினை திறந்து வைத்து, அபுதாபியில் வாழும் புலம்பெயர் தமிழ் சொந்தங்களை சந்தித்து சொந்த மண்ணான தமிழ்நாட்டில் தொழில் செய்ய அழைப்பு விடுத்தேன்.
துபாய் பயணத்தின் வாயிலாக ரூ.6100 கோடி முதலீடும் 15,100 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டன. முதலீட்டை ஈர்க்கவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவுமே துபாய் பயணம் மேற்கொண்டேன். 2021ஆம் ஆண்டின் இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும். அதன் மூலம் மேலும் அதிகமான முதலீடு திரட்டப்படும். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்" எனத் தெரிவித்தார்.