கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி சேகரிப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கவும் அந்த நிதியை கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்திக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டு அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது.
மோடி அரசின் இந்த முடிவு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருப்பதால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, திமுக எம்.பி. ஒருவரிடம் பேசிய போது, "வருடத்துக்கு 5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்குகிறது. இந்த நிதியை தொகுதியின் வளர்ச்சிக்காக தேவையான திட்டங்களுக்கு தொகுதி எம்.பி.க்கள் ஒதுக்குவார்கள்.
அந்த வகையில், ஏற்கனவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக எம்.பி.க்கள் நிதி ஒதுக்கியிருப்பதால் அந்தந்த எம்.பி.க்கள் சார்ந்த கட்சிகளுக்கு நல்ல பெயர் கிடைக்கிறது. இதனை தடுப்பதற்காகத்தான் இப்படி ஒரு முடிவை திடீரென எடுத்துள்ளது மத்திய அரசு.
மேலும், தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்வதில் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு 30 சதவீத கமிஷன் கிடைக்கிறது. இப்போது கேபினெட்டில் எடுக்கப்பட்ட முடிவால் அந்த கமிஷன் கட் ஆகிறது. இதனால் எம்.பி.க்களுக்கு அதிர்ச்சி" என்கிறார்.