![dmk stalin request](http://image.nakkheeran.in/cdn/farfuture/pi5_Rzuw0wHJ5PZLk4gEWPxy-h_6ShxsUgiHP2PUpr0/1615604508/sites/default/files/inline-images/679769_6.jpg)
நேற்று (12.03.2021) ஒரே கட்டமாக திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கிடைக்காதவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், 'உன்னுடைய சுற்று வரும்வரை நீ காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும்' என அண்ணா சொன்னதை மேற்கோள்காட்டி, சீட்டு கிடைக்காத திமுகவினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், “பிடிவாதம் பிடித்தால், நெருக்கடி ஏற்படுத்தினால் அவர்கள் 'உடன்பிறப்பு' என்ற தகுதியை இழந்துவிடுவார்கள். பிடிவாதம் பிடிப்போரின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கேள்விக்குறியாகிவிடும்.
விருப்ப மனு கொடுத்தவர்கள் அத்தனைபேரையும் வேட்பாளராக அறிவிக்க ஆசைதான். ஆசைகள் கடல்போல் இருந்தாலும் தொகுதிகளின் எண்ணிக்கை கையளவுதானே. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றியைத் தடுக்க தந்திரம், சதி, சூழ்ச்சிகளை செய்வர். அதிகாரம் பலம் கொண்டவர்கள் திமுகவை எளிதாக வெற்றிபெற விடமாட்டார்கள். தேர்தலில் தந்திரங்கள், சதிகள், சூழ்ச்சிகளை முறியடிக்க திமுகவினரின் உழைப்பு, ஒத்துழைப்பு தேவை. திமுக என்ற பெட்டகத்திலுள்ள உடைகள் அனைத்தும் உயர்ந்தவை, தரமானவை, எழில் கூட்டுபவை. அதில் 173 உடைகளை மட்டும் இந்த சட்டமன்ற தேர்தல் களத்திற்கு பயன்படுத்தியுள்ளோம். இன்னும் ஏராளமான தரமான பயன்தரத்தக்க உடைகள் நேர்காணலில் என்னை அலங்கரித்துள்ளன. இன்னும் பல களங்கள், வாய்ப்புகள் உள்ளதால் உரிய முறையில் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.