ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த முறை திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை ஒதுக்கியிருந்த நிலையில், இம்முறையும் காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து நேரடியாகவே அதிமுக களமிறங்கவுள்ள நிலையில், வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாஜகவிற்கானது இல்லை என்றும், ஒரு பலம் வாய்ந்த கூட்டணி வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த தேர்தலில் பாஜகவின் பலம் என்ன என்று நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. திமுக வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. அதனால்தான் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறும் வகையில் ஒரு வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டும். ஏற்கனவே அதிமுகவில் அந்த தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். அதனால் வேட்பாளர்கள் தொடர்பாக புதிதாக ஆராய்வதற்கு எதுவுமில்லை. தேர்தலுக்கு இன்னும் நீண்ட நாட்கள் இருக்கிறது. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் இது குறித்து அறிவிப்போம்" என்றார்.