ராகவன் - தனலட்சுமி குடும்பத்தினருக்கு உதவும்
திட்டக்குடி திமுக எம்.எல்.ஏ கணேசன்
செப்டம்பர் 19-22 நக்கீரன் இதழில் "அரசும் உதவலை... கட்சியும் கண்டுக்கலை..." -இப்படித்தான் இங்கே பல குடும்பங்கள்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
"நான் கூலி வேலைசெய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு இரு பெண் குழந்தைகள். ஒரே ஒரு கூரைவீடு தவிர வேறெதுவும் இல்லை. எங்கள் ஊரிலேயே என் வீடு மட்டும்தான் கூரைவீடு. அதுவும் இடியும் நிலையில் உள்ளது. மழை பொழியும்போது பக்கத்து வீட்டு திண்ணையில்தான் மழைச்சாரலில் ஒண்டியிருப்போம். அதனால் வீட்டைச் சரிசெய்ய அரசிடம் அல்லது தி.மு.க தலைவரிடம் நிதியுதவிக்குப் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மிக துயரமான சூழலில் இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்'' எனும் கடிதம் நம் அலுவலகத்திற்கு வர அந்த முகவரி தேடிப்போனாம்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள சேப்பாக்கத்திலுள்ளது இராகவனின் வீடு. வீடுபோல் தெரியும் அது வீடில்லை. சுவர்கள் இடிந்து, மேற்கூரைகள் கிழிந்து அலங்கோலமாகக் காட்சியளித்தது.
இராகவன் (53 வயது), அவரது மனைவி தனலட்சுமி (43). இருவரும் விவசாயக் கூலிகள். இரண்டு மகள்கள். மூத்த மகள் சௌமியா பி.ஏ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறார். இளைய மகள் சரண்யாதேவி வீட்டு வேலைகள், விவசாயக் கூலி வேலைகள் செய்துகொண்டே வீட்டிலிருந்தபடி அஞ்சல் வழியில் பி.ஏ. (ஆங்கிலம்) படிக்கிறார்.
"என்னுடைய தந்தையார் தி.மு.க.வில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர். அதனால் எனக்குச் சிறுவயதிலிருந்தே கட்சி மீது ஆர்வம். தி.மு.க நடத்திய அனைத்து நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் கலந்துகொள்வேன். விருத்தா சலத்தில் நடந்த இந்தி எழுத்துகளை தார்ப்பூசி அழிக்கும் போராட்டத்தில் கலந்துகொண்டு கடலூர் கேப்பர் மலையில் 10 நாட்களுக்கும் மேலாக ஜெயிலில் இருந்தேன். நான் ஊருக்கு ஒரு குடி. சொந்த பந்தம், அங்காளி பங்காளின்னு ஊர்ல யாரும் இல்லை. அதனால் என்னைப்போல் இல்லாதவர்களை எதற்கும் கூப்பிடுவதில்லை. கட்சிக்காரன் வீடுன்னு எலெக்சன் நேரத்துல செவத்துல சின்னம் வரைவாங்க. ஓட்டுப் போடுவதற்கு கூப்பிடுவாங்க. அவ்வளவுதான்.
எங்களுக்கு இரண்டும் பெண் குழந்தைகள். அதுங்களை படிக்க வக்கறதுக்கே படாத கஷ்டம் பட்டுக்கிட்டிருக்கோம். பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 1,500 ரூபாய் ஒவ்வொரு குழந்தைங்க பெயர்கள்லயும் அரசாங்கம் டெபாசிட் செய்யும். 18 வயது முடிந்த பிறகு 5,000 ரூபாய் கிடைக்கும். இது இப்ப 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள். அதோட கால் பவுன் மோதிரமும் கொடுக்கறாங்க. ஆனா எங்களுக்கு அதே பழைய திட்டம்தான். அந்த 5,000 ரூபாய் வாங்குவதற்கு 4 ஆண்டுகளாக அலைந்துகொண்டிருக்கிறேன்'' எனக் கவலையுடன் கூறுகிறார் இராகவன்.
"படுத்து எழுந்திரிக்க ஒரு வீடு இல்லையென்றால் சம்சாரிகள் பாடு திண்டாட்டம்தான். அரசாங்கங்கள் தான் பல்வேறு திட்டங்களில் வீடு கொடுக்கிறார்களே வாங்கிக் கட்டவேண்டியதுதானே?'' என இராகவனிடம் கேட்டோம், "அரசு சார்பில் வீடு ஒதுக்குகிறார்கள். ஆனால் அந்த வீடு வாங்கறதுக்கு கிளார்க், தலைவர், அதிகாரிங்கன்னு முதல்லயே கமிஷன் கொடுத்தாதான் வீடு ஒதுக்குவாங்கன்றாங்க. அங்கங்க ஒழுகுற கூரைமாத்தறதுக்கும், இடியற செவத்த சரி பண்ணவுமே என்கிட்ட பணம் இல்லை. நான் எங்க கமிஷன் கொடுக்கறது'' என்கிறார் விரக்தியாக.
இராகவன் மனைவி தனலட்சுமி நம்மிடம், "அன்னாட செலவுக்கே அல்லாடுறோம். அதனாலதான் சின்னவள படிக்க வைக்க வசதியில்லாம எங்ககூட கூலி வேலைக்குக் கூட்டிட்டுப் போறோம். ஏரி வேலைகூட குடும்பத்துல ஒருத்தருக்குதான்னுட்டாங்க. நானும், சின்ன பொண்ணும் மாறி மாறி வேலைக்குப் போவோம். அதுவும் அதிக நாள் வேலை கிடைக்காது. இந்த ரெண்டு பொண்ணுகளையும் எப்படிதான் கரையேத்தப் போறோம்னு தெரியலை'' எனக் கலங்குகிறார்.
ஊருக்கு ஒரு குடியாக வாழ்ந்துகொண்டு, இரண்டு பெண் பிள்ளைகளை கரையேற்றும் வழிதெரியாமல், குடியிருக்கும் வீட்டுக்கு கூரைகூட மாற்றமுடியாமல் தவிக்கும் இராகவன் குடும்பத்தினர் அரசுகளுக்கும், சமூகத்திற்கும், கட்சிகளுக்கும் வாக்குச் சீட்டுகள்தான்.
கடலூர் சமூகநலத்துறை அதிகாரிகளிடம் பேசி, பெண்குழந்தைகள் பாதுகாப்பு பத்திர முதிர்வுத் தொகை கிடைக்க நாம் உதவிசெய்தோம். இராகவன் குடும்பத்துக்கு ஒரு பாதுகாப்பான நிழல்கிடைக்க ஆளும் கட்சி- எதிர்க்கட்சி இருவரில் யார் ஏற்பாடுசெய்கிறார் என பார்ப்போம்! எனக் கூறியிருந்தோம்.
இதனைப் படித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான சி.வெ.கணேசனை தொடர்புகொண்டு அந்தக் குடும்பத்திற்கு தகுந்த உதவிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதையடுத்து, சி.வெ.கணேசன் எம்.எல்.ஏ. சேப்பாக்கத்திற்கு நேரில் சென்று ராகவன் மனைவியான தனலட்சுமியிடம் ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவியும், இரண்டு மூட்டை அரிசியும் வழங்கி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும் அரசு திட்டத்தின் அடிப்படையில் உடனடியாக அரசு தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என்று நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டதுடன் கடிதமும் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் கூறிய கணேசன் எம்.எல்.ஏ, "நக்கீரன் செய்தியின் அடிப்படையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், ராகவன் குடும்பத்திற்கு தேவையான உதவிகளைச் செய்து தருமாறும், தொகுப்பு வீடு பெற்றுத்தந்து வீடு கட்டுவதற்கு உண்டான உதவிகளை உடனிருந்து செய்து தருமாறும் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் அந்தக் குடும்பத்திற்குத் தற்போது தேவையான அடிப்படை உதவிகளைச் செய்து தந்துள்ளோம். மேலும் அரசு வீடு பெறுவதற்கு உண்டான ஏற்பாடுகளையும் செய்து தருவோம்" என்றார்.
மாவட்டச் செயலாளர் சி.வெ.கணேசனுடன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் துரை.கருப்புசாமி, மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர் பாண்டுரங்கன், சேப்பாக்கம் கிளை கழகச் செயலாளர் தண்டபாணி, சேப்பாக்கம் ஒன்றியக் கவுன்சிலர் ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
"ஊருக்கு ஒரு குடியாய் கண்டுகொள்ளப்படாமல் இருந்த தமது குடும்ப நிலை குறித்து செய்தி வெளியிட்ட நக்கீரன் இதழுக்கும், அதன் அடிப்படையில் உதவிகள் செய்ய உத்தரவிட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கும், உடனடியாக உதவிகள் செய்திட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட கட்சியினருக்கும் நன்றி தெரிவிப்பதாக இராகவன் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் கூறினர்.