Skip to main content

எனது வெற்றியையும், தமது தோல்வியையும் ஒப்புக்கொண்டு ஸ்டாலின் அரசியலில் இருந்து விலகிக் கொள்வாரா? - அன்புமணி இராமதாஸ்

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தும் என்றும் அது தமிழக அரசின் கடமை என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். இது குறித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, உழவர்களின் நலன்களை காக்கும் வகையிலான முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மட்டுமின்றி பாராட்டத்தக்கதும் ஆகும்.

 

anbumani

 

மேலும் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்னை- சேலம் இடையிலான பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறதே என்று கேள்வி  எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘‘8 வழிச்சாலை அமையவுள்ள பகுதி தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி ஆகும். புதிய சாலை அமைப்பதன் மூலம் அப்பகுதியில் தொழிற்துறையும், உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படும். அதனால் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால், அந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை’’ என்று கூறியுள்ளார். எட்டு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதால் பாதிக்கப்படும் விவசாயிகளின் உணர்வுகளை மதித்து இத்தகைய நிலைப்பாட்டை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

 

palanisamy

 

சென்னை- சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இத்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய 5 மாவட்ட மக்களை விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தேன். அந்த வழக்கில் தான் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு முழுமையானத் தடை விதிப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், அந்த வழக்கில் எனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று கோரி கேவியட் மனுவையும் உச்சநீதிமன்றத்தில் எனது சார்பில் எனது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருக்கின்றனர்.
 

இத்தகைய சூழலில் தான் முதலமைச்சர் பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். இதற்காக முதலமைச்சர் பழனிச்சாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்பின் மூலம் 8 வழி பசுமைச்சாலைத் திட்டம் குறித்த அனைத்து அச்சங்களும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. பசுமைச்சாலை அமைக்கப்பட இருந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் வழக்கம்போல வேளாண்மைப் பணிகளை மேற்கொள்ள முடியும். பசுமைவழிச் சாலை மீண்டும் உயிர்பெற்றுவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு சற்றும் தேவையில்லை. 8 வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது 5 மாவட்ட உழவர்களையும் கொண்டாட்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
 

மீண்டும், மீண்டும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இந்த உலகத்துக்கே உணவு படைக்கும் உழவர்கள் தான் எனது கடவுள் என்பது தான்; உழவர்களின் நலனை பாதிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்; இப்போது மட்டுமல்ல, இனி எந்தக் காலத்தில் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்காக போராட முதல் ஆளாக பாட்டாளி மக்கள் கட்சி களமிறங்கும் என்பதைத் தான். பா.ம.க. உழவர்களுக்கான கட்சி. தமிழக உழவர்களின் நலன்களை பாதுகாக்க பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பாடுபடும்.
 

தமிழக உழவர்களுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, சென்னை & சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வாங்கியதை தாங்கிக் கொள்ள முடியாத திமுக தலைவர் ஸ்டாலின், ‘‘சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்  தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்ற உறுதிமொழியை முதல்வர் பழனிச்சாமியிடமிருந்து இந்த வழக்கைத் தொடர்ந்த அன்புமணி பெறுவாரா? அவ்வாறு பெற முடியாவிட்டால் அதிமுக கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகுமா?’’ என்று வினா எழுப்பியிருந்தார். இப்போது அதற்கு விடை கிடைத்து விட்டது.
 

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்பதையும்  தாண்டி, உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தும் என்றே முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இப்போதாவது இந்த விஷயத்தில் எனது வெற்றியையும், தமது தோல்வியையும் ஒப்புக்கொண்டு ஸ்டாலின் அரசியலில் இருந்து விலகிக் கொள்வாரா? என்பதை தெரிவிக்க வேண்டும். 
 

சென்னை & சேலம் இடையிலான 8 வழிச்சாலை விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் உண்மை. இதுதொடர்பாக 11.06.2018 அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், ‘‘8 வழிச்சாலை போடுவது தவறு என்று கூறவில்லை. கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து பணியை துவக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்’’ என்று கூறினார். 
 

அதேநாளில் சட்டப்பேரவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘பசுமை வழிச் சாலை போன்ற திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை. அதை திராவிட முன்னேற்றக் கழகம் முழு மனதுடன் வரவேற்கிறது’’ என்று கூறினார். இதைவிட மோசமான துரோகத்தை உழவர்களுக்கு செய்ய முடியாது. இத்தகைய துரோகத்தைச் செய்த மு.க.ஸ்டாலினுக்கு இச்சிக்கல் குறித்து பேச தகுதியில்லை. அதுமட்டுமின்றி இதற்காக உழவர்களிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்