கோவை தொண்டாமுத்தூரில் பால்விலை, சொத்து வரி ஆகியவற்றின் விலையேற்றங்களை எதிர்த்து அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் ஈபிஎஸ் ஆதரவாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
இதன் பின் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும்போது திமுக கூட்டணிக் கட்சிகள் எல்லாம் தொட்டதற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பயங்கர வீரமாகப் பேசினார்கள். இன்று எங்களை எல்லாம் அடிமை எனச் சொல்கின்றனர். நாங்கள் எந்தக் காலத்திலும் யாருக்கும் அடிமை இல்லை.
காவிரிப் பிரச்சனைக்கு இப்போதிருக்கும் மத்திய அரசை 26 நாட்கள் நாங்கள் முடக்கினோம். காவிரிப் பிரச்சனையின் போது எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தோம். மக்களுக்கான பிரச்சனைகளில் கண்டிப்பாக எதிர்ப்போம். ஆனால் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர்தான் அடிமைகள்.
திமுக எனச் சொன்னாலும், உதயநிதியை அமைச்சராக்கினாலும் ஆமாம் என்கின்றனர். திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்கின்றனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும்போது காவல்துறை முதல் பரிசை பெற்றது. திமுக ஆட்சியில் காவல்துறை மோசமாக ஆகிவிட்டது. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை” எனக் கூறினார்.