மக்களவை தேர்தல் நடந்துவரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இப்போது நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை வேலையின்மை மற்றும் மோடியின் தவறான பொருளாதார கொள்கைகள். இந்த பொருளாதார கொள்கை நாட்டின் பொருளாதாரத்தை அழித்திருக்கிறது. மோடி 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார். ஆனால் இன்று என்ன செய்திருக்கிறார். விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து அவர் வாய் திறப்பதே இல்லை.
இந்திய ராணுவமும், விமானப்படையும் மோடியின் தனிப்பட்ட சொத்துக்கள் இல்லை என அவர் புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை வீடியோ கேம் என்று சொல்வது மூலம் அவர்கள் காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்தவில்லை. இந்திய ராணுவத்தை அவமானப்படுத்துகிறார்கள்.
மேலும் மோடியை திருடன் என்று கூறிய விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசியதற்கு நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டேன், பாஜகவிடமோ அல்லது மோடியிடமோ மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால் 'காவலாளி ஒரு திருடன்' என்பது தான் காங்கிரஸின் முழக்கம்.
மேலும் மோடி பதவிக்கு வரும் போது அவர் அழிக்க முடியாதவர். அடுத்த 10 முதல் 15 வருடங்களுக்கு மோடியை அசைக்க முடியாது என அனைவரும் கூறினர். ஆனால் அவரது பிம்பத்தை உடைத்து உண்மையை மக்களுக்கு காட்டுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 10 முதல் 20 நாட்கள் தான் ஆனது" என கூறினார்.