
தமிழக சட்டப்பேரவையில் இன்று (15-03-25) 2025-2026ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 9:30 மணிக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை வாசித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், “மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மல்லிகை சாகுபடியை அதிகரிக்க ரூ.1.6 கோடி நிதி ஒதுக்கப்படும். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த அரசு கட்டடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும். இந்த இயற்கை வேளாண்மை திட்டத்தை செயல்படுத்த 37 மாவட்டங்களில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்படும். ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு மானியத் தொகை 40% இருந்து 60% உயர்த்தி வழங்கப்படும். ரூ.15 கோடியில் 7 விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானிய விலையில் கொய்யா, எலுமிச்சை செடிகளின் தொகுப்பு வழங்கப்படும். 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானிய விலையில் காய்கறிகளின் விதை தொகுப்பு வழங்கப்படும். தென்னை பயிர் செய்யப்படும் மாவட்டங்களில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த ரூ.10.5 கோடியில் கோடைக்காலப் பயிர் திட்டம் அறிமுகம் செய்யப்படும். தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை விரைவில் வெளியிடப்படும். பாரம்பரிய காய்கறிகளின் சாகுபடி செய்ய ரூ.2.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ.215லிருந்து ரூ.349 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
உழவர்களின் நிலங்களில் விதைப் பண்ணைகள் அமைக்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வெங்காயம் சேமித்து வைத்து விற்பனை செய்ய கிடங்கு அமைக்க மானியம் வழங்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 17,000 விவசாயிகளுக்கு ரூ.215.8 கோடியில் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்படும். சிறு, குறு விவசாயிகள் பயனுக்காக ரூ.10.5 கோடியில் 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். இ-வாடகை செயலி மூலம் இந்த வேளாண் இயந்திரங்கள் வாடகையாக வழங்கப்படும். காவிரி, வெண்ணாறு, வெள்ளாறு வடி நிலப்பகுதிகளில் 2925 கி.மீ தூரம் வாய்க்கால்கள் தூர்வாரப்படும். மின் இணைப்பு இல்லாத 1000 விவசாயிகளுக்கு சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் வழங்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கப்படும். புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட 1,000 விவசாயிகளுக்கு ரூ.1.50 கோடி மானியம் வழங்கப்படும். ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் செயல்படுத்தப்படும். ரூ.20 கோடி செலவில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 9 சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.50.79 நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்படும். வேளாண் விளைப்பொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்.
விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் வரை முதலீட்டுக் கடன் வழங்கப்படும். ரூ.6 கோடியில் வேளாண் தர நிர்ணய ஆய்வகம் அமைக்கப்படும். ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு மிளகாய் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.11.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2025-2026ஆம் ஆண்டில் விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி செய்யும் திட்டத்தின் கீழ் ரூ.1,472 கோடி தள்ளுபடி செய்யப்படும். தற்போது வரை ரூ.10,346 கோடியுடன் வட்டித் தொகையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உரிய முறையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். 5,000 சிறிய பால் பண்ணைகள் அமைத்திட 4% வட்டி மானியம் வழங்கப்படும். 80,000 இயற்கை மேலாண்மை பணிகளுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உழவர்களுக்கு இலவச மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை செலுத்த ரூ.8,186 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பயிர்க்கடன் வட்டி மானியத்துக்கு ரூ.853 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட்டிற்கு மொத்தம் ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.