
ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில், பா.ஜ.க 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களைப் பெற்ற பா.ஜ.க, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. இதனையடுத்து, அம்மாநிலத்தில் முதல்வராக இருந்த நயாப் சிங் சைனி, தொடர்ந்து முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், ஹரியானாவின் பரிதாபாத், ரோத்தக், யமுனா நகர், ஹிசார், குருகிராம்,கர்னால், மானேசர் ஆகிய 7 மாநகராட்சிகளுக்கு கடந்த 2ஆம் தேதியும், பானிபட் , அம்பாலா மற்றும் சோனிபட் ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு கடந்த 9ஆம் தேதியும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. கடந்த 9ஆம் தேதியன்றே, 21 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில், ஆளும் கட்சியான பா.ஜ.கவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் போட்டியிட்டது.
உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (12-03-25) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தம் 10 மாநகராட்சி இடங்களில் 9 இடங்கள் பெற்று பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது. மானேசர் மாநகராட்சியில் சுயேட்சை வேட்பாளர் இந்திரஜித் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். மாநகராட்களைத் தவிர, 21 நகராட்சிகளில் பெரும்பான்மையான இடங்களை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. 10 மாநகராட்சி இடங்களில் 1 இடம் கூட காங்கிரஸ் கைப்பற்றவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த பிறகு, உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.