Skip to main content

“முத்தான திட்டங்களுடன் வேளாண்மை பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது” - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

Published on 15/03/2025 | Edited on 15/03/2025

 

 

Chief Minister M.K. Stalin says Agriculture budget has been released with ambitious plans

தமிழக சட்டப்பேரவையில் இன்று (15-03-25) 2025-2026ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 9:30 மணிக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 

இதில், 17,000 விவசாயிகளுக்கு ரூ.215.8 கோடியில் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள், ரூ.10.5 கோடியில் 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள், விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் வரை முதலீட்டுக் கடன், சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு மிளகாய் சாகுபடி, ரூ.1,472 கோடி கடன் தள்ளுபடி, பயிர்க்கடன் வட்டி மானியத்துக்கு ரூ.853 கோடி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு நிதியுதவி, மாநில அளவில் அதிக உற்பத்தினை செய்யும் முதல் 3 விவசாயிகளுக்கு பரிசுத் தொகை, ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம், 1,000 உழவர் நலச் சேவை மையங்கள், டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம், 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்திட மானியம், மழைவாழ் உழவர்களுக்கு உழவர் அட்டை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. தமிழக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு, முதலமைச்சரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள், புதிய தொழில்நுட்பங்கள், சிறு குறு விவசாயிகள் நலன், மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம், டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம், வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் 2025 வெளியிடப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்