
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் புகைப்படம் இல்லை எனக் கூறி அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கலந்துகொள்ளாமல் இருந்தார். இது அதிமுக கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து, ஜெயலலிதா பிறந்தநாளான கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்ட நிலையில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் இருந்தார். இது மீண்டும் அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளானது. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே முரண் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த சூழ்நிலையில், 2025-2026ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை நேற்று (14-03-25) தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில், வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 9:30 மணிக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக, சபாநாயகர் அப்பாவுவை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது மேலும், தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை செங்கோட்டையன் தொடர்ந்து தவிர்த்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “கர்நாடகா காங்கிரஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக உரிமைகளை ஏன் பெறவில்லை?. இந்தியா கூட்டணியால் தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை கிடைத்தது?. மத்தியில் காங்கிரஸுடன் ஆட்சியில் இருந்த போது நதிநீர் பிரச்சனையைத் தீர்த்திருக்கலாம். விவசாயிகளை ஏமாற்றுவதற்காக வேளாண் பட்ஜெட் என்ற நாடகத்தை திமுக அரங்கேற்றி இருக்கிறது. தவறு செய்ய வசதியான திட்டங்கள் தான் இந்த பட்ஜெட்டில் உள்ளன. விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. இந்த 5 ஆண்டுக் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் என்பது வெறும் கண் துடைப்பு தான். தந்திர மாடல் செய்கின்ற ஒரே ஆட்சி ஸ்டாலின் மாடல் ஆட்சி தான். வேளாண் துறை சார்ந்த பல துறைகளை ஒன்றாக இணைத்து அவியல் போல ஒரு பட்ஜெட்டை அறிவித்துள்ளனர். விவசாயிகளுக்கென தனியாக வேளாண் பட்ஜெட் என்பது போலியானது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தான் இதில் பல உள்ளன. 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை 1:30 மணி நேரம் வாசித்து சாதனை படைத்துள்ளனர்” என்று கூறினார்.
அப்போது செங்கோட்டையன் உங்களை சந்திப்பதை தொடர்ந்து தவிர்த்து வருவதற்கு என்ன காரணம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அதை அவர் கிட்ட கேளுங்க.. காரணம் அவரை கேட்டால் தானே தெரியும். என்னிடம் கேட்டால் எப்படி தெரியும்?. தனிப்பட்ட பிரச்சனையை பேசுற இடம் இது இல்லை. அவருக்கு வேலை இருக்கும். இது சுதந்திரமாகச் செயல்படுகின்ற கட்சி. திமுக மாதிரி அடிமை ஆட்கள் இங்கு கிடையாது. என்றைக்குமே நான் யாரையும் எதிர்பார்ப்பது கிடையாது. நான் ஒரு சாதாரண தொண்டன். திமுக மாதிரி வாரிசு அரசியல் இங்கு கிடையாது; குடும்ப கட்சி கிடையாது. சர்வாதிகார ஆட்சி கிடையாது. சுதந்திரமாக அனைவரும் செயல்படலாம். எங்கே வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் போகலாம். எங்களுடைய ஒரே எதிரி திமுக தான்” என்று தெரிவித்தார்.