
வடமாநிலங்களில் இந்து சமூக மக்களால் வெகு விமர்சையாக ஹோலி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையையொட்டி, ஒருவர் மீது ஒருவர் எந்தவித வேறுபாடுமின்றி வண்ணப் பொடிகளைப் பூசிக் கொண்டாடுவர். இந்த பண்டிகை நாளை (14-03-25) கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர் கடந்த சில நாட்களாக மசூதிக்குச் சென்று நோன்பு திறந்து வருகின்றனர். ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தோடு ஒத்துப்போவதால் வடமாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இதனால், இந்து மக்களை ஹோலி பண்டிகையைக் கொண்டாட இஸ்லாமியர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது வண்ணங்கள் பூசப்பட்டால் கோபப்படக்கூடாது என்றும் அவர்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் பீகார் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரிபூசன் தாக்கூர் பேசி சர்ச்சையைக் கிளப்பினார். அதனை தொடர்ந்து, முஸ்லிம்கள் தங்கள் மீது வண்ணங்கள் விழ விரும்பவில்லை என்றால், அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற நேரடி செய்தியை வழங்கியுள்ளதாக உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்ட காவல்துறை மூத்த அதிகாரி அனுஜ் குமார் சவுத்ரி சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
காவல்துறை அதிகாரி அனுஜ் குமார் சவுத்ரியின் கருத்துக்களை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ஆதரித்து பேசினார். இது மேலும், சர்ச்சையாகி உருவெடுத்தது. இந்த சூழ்நிலையில், சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதி உள்ளிட்ட 10 மசூதிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நாளை பேரணி நடைபெறவிருக்கிறது. ரம்ஜான் மாதத்தின் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தோடு, ஹோலி பண்டிகை இணைந்திருப்பதால் மத மோதல்கள் ஏற்படக்கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியான அலிகார், ஷாஜஹான்பூர் ஆகிய மசூதிகள் தார்ப்பாய்களால் மூடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகும் மத வெறுப்பு பதிவுகள், வதந்திகள் பரவுவதைத் தடுக்க போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜமா மசூதியை, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டிருந்தாக தொடரப்பட்ட வழக்கில், மசூதியை ஆய்வு செய்ய உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்தானடு நவம்பர் மாதம் உள்ளூர் போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்வதற்காக வந்த போது ஆய்வுக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடந்தது. இந்த மோதலில் வாகனங்கள் எரிப்பு போன்ற பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் அங்கு 4 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.