
தமிழக சட்டப்பேரவையில் இன்று (15-03-25) 2025-2026ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 9:30 மணிக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை வாசித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், “நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்தின் மரணத்திற்கான ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதியுதவி ரூ. 20,000 இருந்து ரூ.1 லட்சமாகவும், இயற்கை மரணத்திற்கான நிதியுதவி ரூ.20,000 இருந்து ரூ.30,000 ஆகவும், இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதியுதவி ரூ. 2,500 இருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். மக்காச்சோளம் சாகுபடி மூலம் உழவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்க செய்யும் வகையில், மக்காச்சோளம் மேம்பாட்டு திட்டம் ரூ.1,87,000 பரப்பளவில் 79,000 உழவர்கள் பயனடையும் வகையில் சுமார் ரூ.40.27 கோடி நிதி ஒதுக்கப்படும். 7,500 உழவர்கள் பயனடையும் வகையில், இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் 2 ஆண்டு திட்டமாக செயல்படுத்தப்படும். வேளாண்மையில் அதிக உற்பத்தி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறியும் விவசாயிகளுக்கு பரிசுகள் அறிவிக்கப்படும். இதற்காக ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
உழவர்களை அவர்களது கிராமங்களிலேயே சந்தித்து, தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிட உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். வேளாண்மைத்துறை சார்பில் மாதம் இருமுறை கிராமங்களில் முகாம் நடத்தப்படும். முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை மேம்படுத்திட ரூ.142 கோடி நிதி ஒதுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 2,338 கிராம ஊராட்சிகளிலும் ரூ.269.50 கோடி மதிப்பில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.25.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ.108 கோடியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் நிலக்கடலை, எள், ஆமணக்கு சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க ரூ.108 கோடி நிதி ஒதுக்கப்படும். சிறுதானியங்கள், பயிர் வகைகள், கரும்பு, எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட 11 பயிர்களில் நவீன வேளாண் தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து உயர்விளைச்சல் பெரும் உழவர்களை ஊக்குவிக்க மாநில அளவில் அதிக உற்பத்தினை செய்யும் முதல் 3 விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் 2025-2026ஆம் ஆண்டிலும், ரூ. 55 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பள்ளி மாணவர்கள் உயிர்மை வேளாண்மை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர். நெல் உற்பத்தியில் சாதனை படைத்துள்ள 100 முன்னோடு உழவர்களை ஜப்பான், சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 82 லட்சம் ஏக்கரில் துவரை சாகுபடி செய்ய, பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க 5 காளான் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். முந்திரி விவசாயிகளுக்காக ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைக்கப்படும். நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்துவதற்காக 1.36 லட்சம் உழவர்கள் பயன்பெறும் வகையில், ரூ.1,168 கோடி நிதி ஒதுக்கீட்டில் நுண்ணீர்ப் பாசன திட்டம் செயல்படுத்தப்படும். ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.