ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத்திடம் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது.
1984-ஆம் ஆண்டு இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு, சீக்கியர்களுக்கு எதிராக கடுமையான கலவரம் நடந்தது. இதில் 3325 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2733 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸைச் சேர்ந்த ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் மற்றும் கமல்நாத் ஆகியோர்தான் இந்தக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு தொடர்பில்லை என கமல்நாத் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சஜ்ஜன் குமாருக்கு கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் கமல்நாத்திடம் விசாரணையை தொடங்க உள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. இந்த கலவரத்தில் கமல்நாத்தின் பங்கு குறித்த சாட்சிகளை கூற இருவர் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவர காலத்தில் கிரைம் செய்தியாளராக பணியாற்றிய சஞ்சய் சூரி, பீகாரைச் சேர்ந்த முக்தியார் சிங் ஆகியோர் கமல்நாத் வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பார்கள் என தெரிகிறது.
கலவரத்தில் ஈடுபட்ட 5 பேருக்கு கமல்நாத் அடைக்கலம் கொடுத்ததாகவும், பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டு ஆதரமில்லாததால் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ள புலனாய்வு குழு, இது தொடர்பாக விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது.