குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லி மதுரா சாலையில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த மோதலால் 6 காவலர்கள் மற்றும் 35 க்கும் மேற்பட்ட மாணவர்களும் காயமடைந்தனர். இருப்பினும் மாணவர்கள் அங்கு விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த சட்டதிருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக சாடியதோடு, அமைதியான போராட்டம் மேற்கொள்பவர்களுக்கு ஆதரவையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "CAB & NRC ஆகியவை வெகுஜன பிரிவினைக்கான இந்தியா மீது பாசிஸ்டுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஆயுதங்கள். இந்த மோசமான ஆயுதங்களுக்கு எதிராக சிறந்த போராட்டம் என்பது, அமைதியான, வன்முறையற்ற சத்தியாக்கிரகமே ஆகும். CAB & NRC க்கு எதிராக அமைதியாக போராடுபவர்கள் அனைவருக்கும் நான் எப்போதும் துணை நிற்பேன்" என தெரிவித்துள்ளார்.