கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதித்தேர்வுகள் நடத்தும் முடிவுக்கு எதிராக ஆதித்யா தாக்கரே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதில் பள்ளி மாணவர்களுக்கு சில மாநிலங்களில் தேர்வு நடத்தப்படாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கும் சூழலில், அதனையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஐஐடி போன்ற பெரும் கல்வி நிறுவனங்கள் பலவும், மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது என்றும், முந்தைய தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளன. ஆனால், பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாமலேயே உள்ளன.
இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவில், பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் பல்கலைக்கழக மற்றும் கல்லூரித் தேர்வுகள் நடத்தப்படும் எனக்கூறி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் யுஜிசி வெளியிட்டது. யுஜிசி-யின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் மஹாராஷ்ட்ர அமைச்சர் ஆதித்யா தாக்கரே. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து உச்சநீதிமன்றம் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தேர்வு நடத்துவது தொடர்பான முடிவை மாநில அரசுகள் எடுக்க அனுமதிக்கவேண்டும் என ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.