முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தும், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். பிபின் ராவத்தின் மனைவியும் இந்த விபத்தில் உயிரிழந்தார். நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த துயர நிகழ்வு. இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (9.12.2021) அவர் பெங்களூருவில் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த நால்வரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து அந்த நால்வரின் உடல்களில், பிபின் ராவத், மதுலிகா ராவத், பிரிகேடியர் லிட்டர் ஆகியோரின் உடல்கள் இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டன. மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஆக்ராவை சேர்ந்த விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகானின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின்னர் பேசிய அவர், பிருத்வி சிங் சவுகானின் குடும்பத்தில் ஒருவருக்கு மாநில அரசு வேலை வழங்கும் எனவும், குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு பிருத்வி சிங் சவுகானின் பெயர் சூட்டப்படும் எனவும் அறிவித்துள்ளார்.