உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதனையடுத்து, தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதில், 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
பா.ஜ.கவின் கோட்டையாக இருக்கக்கூடிய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் கூட காங்கிரஸ் கைப்பற்றியிருப்பது முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க 9 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. பா.ஜ.க கூட்டணியில் உள்ள சிவசேனா 7 இடங்களிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 1 இடங்களிலும் வெற்றி பெற்றியிருந்தது. இதனையடுத்து, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், மக்களவைத் தேர்தலில் மோசமான தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காகத் தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், சரத் பவாரிடம் இருந்து பிரிந்த அஜித் பவாரின் தேசியவாத கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 10-15 பேர் சரத் பவார் முகாமுடன் தொடர்பில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “பல தலைவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். ஜூன் 9-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இந்த முன்மொழிவுகள் குறித்து நாங்கள் சிந்திப்போம். ஜூன் 10-ஆம் தேதி, எங்கள் நிறுவன தினம் கொண்டாடப்படும்” என்று கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார், சரத்பவாரிடம் இருந்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.