ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது கடந்த 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று மத்திய அமைச்ச ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தாக்குதலுக்கு பிந்தையா நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், 'மத்திய அரசுடன் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் எப்போதும் அரசின் பக்கம் துணை நிற்போம். 1947-ம் ஆண்டு போருக்கு பின் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் கொல்லப்பட்டது இதுதான் முதல் முறையாகும். ராணுவ பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒட்டுமொத்த நாடும் ஆதாரவாக உள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும்' என்றார்.