மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் சுவேந்த் அதிகாரி மம்தாவை தோல்வியடையச் செய்தார். இருப்பினும், அம்மாநில முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட மம்தா, அப்பதவியை தக்கவைத்துக்கொள்ள நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த நிலையில், மேற்கு வங்க அரசின் கோரிக்கையை ஏற்று இந்தியத் தேர்தல் ஆணையம், பவானிப்பூர் உட்பட மேற்கு வங்கத்தின் மூன்று தொகுதிகளில் தேர்தலை நடத்தியது.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில், எதிர்பார்க்கப்பட்டது போலவே மம்தா பவானிப்பூரில் பெரும் வெற்றிபெற்றார். அதேபோல் மற்ற இரண்டு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றிபெற்றனர். அதனைத்தொடர்ந்து இன்று (07.10.2021) மம்தா உள்ளிட்ட வெற்றிபெற்ற மூன்று பேருக்கும் சட்டமன்ற உறுப்பினராக மேற்கு வங்க ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் மேற்கு வங்க ஆளுர். சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றதன் மூலம் மம்தா தனது முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
பொதுவாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகரே பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நிலையில், ஆளுநரே மம்தா உள்ளிட்ட மூவருக்கும் நேரடியாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரத்தை மேற்கு வங்க சபாநாயகரிடமிருந்து ஆளுநர் பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.