கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியை சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அரசு கவிழும் நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் மும்பை சென்றனர். இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதே போல் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் கால தாமதம் செய்து வருவதால், பாஜக எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12- ஆம் தேதி தொடங்கியது. கடந்த 18- ஆம் தேதி தனது அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி கொண்டு வந்தார். அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது கடந்த 18 மற்றும் 19- ஆம் தேதிகளில் விவாதம் மட்டுமே நடந்தது. இந்நிலையில் ஆளுநர் வஜூபாய் வாலா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முதல்வர் குமாரசாமி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என முதல்வருக்கு உத்தரவிட்டார். ஆனால் ஆளுநரின் கடிதத்தை ஏற்காத முதல்வர் மற்றும் சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாததால், பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா சட்டப்பேரவையிலே தனது எம்.எல்.ஏக்களுடன் உறங்கினார்.
கவர்னரின் கடிதத்திற்கு எதிராக முதல்வர் குமாரசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதே போல் அதிருப்தி எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளதால், கர்நாடகாவில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழ்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநரை வஜூபாய் வாலா. அந்த அறிக்கையில் மத்திய அரசு தலையிட்டு கர்நாடகத்தில் நிலவும் அசாதாரண நிலைக்கு தீர்வு காண வேண்டும்” என ஆளுநர் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆளும் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.