![Plan to send humans into space by 2025 says PM Office](http://image.nakkheeran.in/cdn/farfuture/RkToYkufPBRNNJUi_b9Dj8s4kkt2bWcfrA9HYbFGCz4/1697535771/sites/default/files/inline-images/gaganyaan-open.jpg)
இதுவரையில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா என 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. அந்த வகையில் இந்தச் சாதனையைப் படைக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காகக் கடந்த 2007 ஆம் ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும் ககன்யான் விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. இதனையடுத்து ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2025 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என ககன்யான் திட்டம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக 20 வகையான முக்கிய பரிசோதனைகள் நடத்தப்படும். 3 முறை ஆளில்லாமல் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் விண்கலம், பூமிக்கு திரும்புவது குறித்த சோதனையை அக்டோபர் 21 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2035 இல் இந்தியா தனக்கான பிரத்யேக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட வேண்டி உள்ளது. 2040 ஆம் ஆண்டிற்குள் நிலவுக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நிலவுக்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த விரிவான அறிக்கைகளை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.