ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவு 370- யை, 35A இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலை பெற்று மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் இன்று காலை 11.00 மணிக்கு அறிவித்தார். அப்போது காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370- யை, 35A நீக்குவதாகவும், காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டனர். காஷ்மீர் மாநில தொடர்பான மசோதாக்கள் இன்று மாலை வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நாடாளுமன்றம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு காஷ்மீர் மாநில தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டனர். மேலும் ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பால், காஷ்மீர் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காஷ்மீர் மாநிலத்திலும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. எனவே அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற தகவலின் அடிப்படையில் இருவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் காஷ்மீர் மாநிலத்தில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.