உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று 97 வயதான மூதாட்டி ஒருவர் ஊராட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ள சுவாரசிய சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.
ராஜஸ்தானில் கடந்த நவம்பரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், முதல் கட்ட பஞ்சாயத்துத் தேர்தல் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்த முதல்கட்ட தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் நீம் கா தானா உபக் கோட்டத்தின் கீழ் வரும் புராணவாஸ் கிராமப் பஞ்சாயத்தில் 97 வயதான மூதாட்டி வித்யா தேவி வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை 207 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்த வெற்றியை பெற்றுள்ளார். அந்த கிராம பஞ்சாயத்தில் மொத்தமுள்ள 1479 வாக்குகளில் வித்யா தேவி 843 வாக்குகளைப் பெற்று தற்போது ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.