Skip to main content

சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியை குழந்தைகள் மீது பரிசோதிக்க நிபுணர் குழு எதிர்ப்பு - காரணம் என்ன? 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

serum institute of india

 

அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசியை, இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவாவாக்ஸ் என்ற பெயரில் தயாரித்துவருகிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் இந்தக் கோவாவாக்ஸ் தடுப்பூசிக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அனுமதி பெற சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

இந்தநிலையில், சமீபத்தில் கோவாவாக்ஸ் தடுப்பூசியை, 2 முதல் 17 வயத்திற்குட்பட்டோர் மீது பரிசோதனை செய்ய சீரம் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்த சூழலில், கோவாவாக்ஸை 2 - 17 வயதானோர் மீது பரிசோதிக்க மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

சீரம் நிறுவனத்தின் விண்ணப்பம் குறித்து ஆலோசித்த மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு, "கோவாவாக்ஸ் தடுப்பூசியின் மூல பதிப்பான நோவாவாக்ஸ் தடுப்பூசி இதுவரை எந்த நாட்டிலும் அனுமதி பெறவில்லை என்பதால், குழந்தைகள் மீது கோவாவாக்ஸ் தடுப்பூசியைப் பரிசோதிக்க அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்க, தற்போது கோவாவாக்ஸ் தடுப்பூசியைக் கொண்டு 18 வயதிற்கு மேற்பட்டோர் மேல் செய்யப்படும் சோதனையின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தரவை சீரம் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்" என கூறியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்