ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் பாஜகவை வீழ்த்த வியூகங்களை வகுத்து நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு சென்று சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார். அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 உதவித்தொகை உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வந்தார்.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற ஆம் ஆத்மி ஒரு சூழலை உருவாக்கி வருவதாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி.சந்தீப் தீட்சித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டணியின் மூன்றாவது கூட்டம் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறவுள்ளது” என்று கூறினார்.
அப்போது பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியினர் தனித்துப் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “ இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான சூழலை ஆம் ஆத்மி கட்சி மட்டுமே உருவாக்கி வருகிறது. இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி ஓடப் போகிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். ஆம் ஆத்மி கட்சி செய்ய உள்ளதை அமித்ஷா வெளிப்படையாக தெரிவித்தார். அவர்கள் அதைத்தான் செய்வார்கள். இது தான் நடக்கப் போகிறது என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும்” என்று கூறினார்.