இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பணிகளில் பெறுவோருக்கு பல்வேறு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசின் சில துறைகளும் அறிவித்துள்ளன. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என பாதுகாப்புத்துறை உயரதிகாரி அனில் பூரி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.அக்னிபத் திட்டத்தில் ஆள் சேர்க்கும் முறைக்கு மத்திய அரசு அறிவிப்பாணையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதல் அக்னிபத் திட்டத்தில் ஆள் சேர்க்கும் நடைமுறைக்கான முன்பதிவுகள் தொடங்கும் எனக்கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர். அதன்பின் வெளியே வந்த அவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ''அக்னிபத் திட்டத்தைக் கைவிடக்கோரி குடியரசு தலைவரிடம் மனு அளித்தோம். அக்னிபத் திட்டத்தில் நன்மைகளை விட ஆபத்துகளே அதிகம். எந்தவித ஆலோசனையும் இன்றி அக்னிபத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தில் சேரும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வேலை தேடும் நிலை ஏற்படும். டெல்லி போராட்டத்தின் பொழுது டெல்லி காவல்துறையால் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்டது குறித்தும் குடியரசுத் தலைவரிடம் புகாரளித்துள்ளோம்'' என்றார்.