இந்தியாவில் தொடர்ந்து கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மஹாராஷ்ட்ராவில் புதிய உச்சத்தை தொட்டுள்ள கரோனா, பஞ்சாப், மத்திய பிரதேச மாநிலங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அம்மாநிலத்தின் போபால் மற்றும் இந்தூரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மத்திய பிரதேச மாநிலத்தில் 1,140 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூரில் விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு முழு நேர ஊரடங்காக மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஜபல்பூரிலும் முழுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று நகரங்களிலும் இன்று இரவு 10 மணி முதல், திங்கட்கிழமை காலை 6 மணிவரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் கல்வி நிலையங்கள் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ள மத்திய பிரதேச அரசு, இன்று முதல் மஹாராஷ்ட்ராவிற்கும் மத்திய பிரதேசத்திற்கும் இடையேயான பேருந்து பயணமும் இரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மஹாராஸ்ட்ராவில் கரோனா பரவல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.