புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துகின்ற நோக்கத்தில் மாநிலத் தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலகிருஷ்ணனை நியமிக்க மாநில அமைச்சரவை முடிவு செய்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பரிந்துரைத்தது. அத்துடன் 2019- ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆனால் மாநிலத் தேர்தல் ஆணையர் பதவிக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அதேசமயம் மாநில அரசு நியமித்த தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணனின் நியமனத்தை ரத்து செய்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் மத்திய அரசு மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் உத்தரவுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான நமச்சிவாயம் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் '2015- ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்து வந்தது. இந்த பதவிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் நியமிக்குமாறு புதுச்சேரி அமைச்சரவை கடந்த 2019- ஆம் ஆண்டு துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அமைச்சரவையின் முடிவை பரிசீலிக்காமல் மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய தேர்வுக் குழுவை நியமித்தார்.
மேலும் மாநிலத் தேர்தல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட்டார். தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது முன்னாள் ஆலோசகரான தேவநீதிதாஸை தேர்தல் ஆணையராக நியமிக்கும் வகையில் அந்த பதவிக்கான தகுதியையும் நிபந்தனைகளையும் மாற்றங்கள் செய்துள்ளார். எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுநரின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை எனவே இந்த உத்தரவுகளை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (05/03/2020) ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் 'புதுச்சேரி மாநிலத்தின் மாநிலத் தேர்தல் ஆணையராக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட டி.எம்.பாலகிருஷ்ணன் நியமனத்துக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகளின்படி சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. எனவே மாநிலத் தேர்தல் ஆணையர் நியமனத்தை ரத்து செய்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் எனக் கூறி துணைநிலை ஆளுநரின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் 'புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சனையின் காரணமாக வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடிப்பது மாநில அரசுக்கும், பொதுமக்களுக்கும் நல்லதல்ல . அரசியலமைப்புச் சட்டத்தின்படி உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் அது தொடர்பாக விரைவில் தீர்வு காண வேண்டும்' எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.