விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகில் மரையூரில் அழியும் நிலையில் உள்ள ராணி மங்கம்மாள், மருதுபாண்டியர் வரலாற்றுக்கு ஆதாரமாக உள்ள 300 ஆண்டுகள் பழமையான சத்திரத்தை பழுது நீக்கி பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்க ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
சேதுயாத்திரையாக தனுஷ்கோடி, ராமேஸ்வரம் செல்பவர்களுக்கு மதுரை நாயக்கர்கள், சேதுபதிகள், மருதுபாண்டியர் சத்திரங்கள் கட்டியுள்ளனர். நரிக்குடி அருகிலுள்ள மரையூர் சத்திரத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ராஜபாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, “மரை எனும் மானின் பெயரிலுள்ள இவ்வூரில், பெரிய மண்டபம், தாழ்வாரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ள பழமையான ஒரு சத்திரம் உள்ளது. மண்டப நுழைவு வாயிலின் மேற்புறம் கஜலட்சுமி சிற்பம் உள்ளது. சதுரவடிவிலான மண்டபத்தில் நேருக்கு நேராக அமைந்த 8 ஜன்னல்களும், 4 வாசல்களும் உள்ளன. தாழ்வாரத்தில் சிற்பங்கள் உள்ள 7 தூண்கள், மண்டபத்தில் வரிசைக்கு 7 என 6 வரிசைகளில் 42 தூண்கள் என மொத்தம் 49 கல்தூண்கள் உள்ளன. தாழ்வாரத் தூண்களில் நின்றநிலையில் திருமால், பூக்கள், ஸ்வஸ்திக், அன்னம், வில்லேந்திய ராமர், லிங்கத்தின் இருபுறமும் நாகம் போன்ற பல புடைப்புச் சிற்பங்கள் உள்ள
ஒரே மாதிரியான சதுரத்தூண்கள் சத்திரத்துக்கு அழகு சேர்க்கின்றன. தரையில் பெரிய கற்கள் பதிக்கப்பட்டிருந்துள்ளன. செவ்வக வடிவில் வெட்டப்பட்ட கருங்கற்கள், செங்கல், சுண்ணாம்புச் சாந்து பயன்படுத்தி சத்திரம் கட்டப்பட்டுள்ளது. தாழ்வாரத்தின் தெற்கிலும், மண்டபத்தின் உள்ளே தென்மேற்கு மூலையிலும் ஒரு அறை உள்ளது. மேற்கிலும் இரு அறைகள் இருந்து இடிந்துள்ளன. இந்த அறைகள் சமையலறை, சத்திரப் பொறுப்பாளர் தங்குமிடம், உணவுப் பொருட்கள் வைப்பறை, தங்குபவர்கள் பொருள் பாதுகாப்பறை என இருந்திருக்கலாம்.
கி.பி.1689 முதல் 1706 வரை தனது பேரனான விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் சார்பாளராக மதுரையை ஆண்டவர் ராணி மங்கம்மாள். இவர் காலத்தில் தான் மரையூர் மற்றும் நரிக்குடி சத்திரங்கள் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தாழ்வாரத்தில் உள்ள தூண்களில் எதிரெதிரே வணங்கிய நிலையில் இருவர் சிற்பங்கள் உள்ளன. இதில் ஒருவர் பெரியவராகவும், மற்றவர் சிறியவராகவும் காட்டப்பட்டுள்ளது. உருவ அமைப்பு கொண்டு இவை மருதுபாண்டியர் சிற்பங்கள் எனலாம். இதன்மூலம் மருதுபாண்டியர் நரிக்குடி சத்திரத்தை புதுப்பித்து அதற்கு பல ஊர்களை தானமாக கொடுத்ததைப்போல, இந்த சத்திரத்தையும் மராமத்து செய்து, புதுப்பித்து, சிற்பங்கள் உள்ள தூண்களையும் அமைத்துள்ளனர் என அறிய முடிகிறது. இதில் பெரிய மருது சிற்பம் சேதமடைந்துள்ளது.
சத்திரத்தின் வடமேற்கில் கூரைப் பகுதி இடிந்து விழுந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இது பள்ளியாக இருந்துள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லாததால், இதன் மேற்பகுதியிலும், சுற்றிலும் மரங்கள் வளர்ந்துள்ளன. வரலாற்றுக்கு ஆதாரமாக உள்ள இச்சத்திரத்தில் வளர்ந்துள்ள மரங்களை அகற்றி, பழுது நீக்கி பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும்” என அரசைக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.