‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் முனைவர் இராம சுப்பிரமணியம், த.வெ.க மாநாட்டில் விஜய் பேசியது குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
விஜய் மாநாட்டை நிகழ்த்தி காட்டியதோடு அவர் எந்த அளவிற்கு மக்களோடு நெருக்கமாக இருக்கிறார் என்பது மிகவும் முக்கியமானது. அண்ணாதுரை போன்ற எளிமையானவரை இனி பார்க்கவே முடியாது. நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அவரை பேசுவதற்காக அழைப்போம். அவரிடம் நெருங்கி பேசும் அளவிற்கு மிகவும் எளிமையானர். ஆனால் விஜய்யை எல்லோராலும் அணுக முடியாமா? என்ற கேள்வி எழுகிறது. ஆளுநரே வேண்டாம், இரு மொழி கொள்கை, தமிழ் மொழி முக்கியத்துவம், கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றுவது இப்படி பல்வேறு விஷயங்களை விஜய் பேசியிருந்தார். இதில் எதுவுமே புதுமை இல்லை. அவர் சொன்ன அனைத்தையும் திராவிடக் கட்சிகள் முன்பு இருந்தே சொல்லி வருவதுதான். நீட் எதிர்ப்பு பற்றி விஜய் பேசினார். அதில் அனிதா மரணம் அவருக்கு மட்டும்தான் பாதித்ததா? எல்லோருக்கும்தான் பாதித்தது. நான் பா.ஜ.க.வில் இருந்தபோதும் கூட அனிதா மரணம் எனக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் இருக்கிற அனைவரும் நீட் தேர்வை எதிர்த்துதான் பேசி வருகின்றனர். மொத்தத்தில் விஜய் புதுமையாக ஒரு விஷயம் கூட சொல்லவில்லை
விஜய் தனது கட்சியை ஏ டீம், பி டீம் கிடையாது என்று சொல்கிறார். என்னை பொறுத்தவரை அவர் பா.ஜ.க.வின் ஏதோ ஒரு கிளை அணியாகத்தான் இயக்கப்படுகிறார். சாயம் பூசுவதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் ஆனால் அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் பா.ஜ.க. செயல்பாடுகள் போல் தான் தெரிகிறது. கொள்கைக்கு எதிரி என்று மறைமுகமாகத்தான் சொல்கிறார், ஆனால் விஜய் எதிரியின் பெயரை சொல்லாமல் இருக்கிறார். அதே போல் ஊழலை ஒழிப்பேன் என்று விஜய் பேசினார். உலகத்தில் 100 சதவிகிதம் ஊழல் இல்லாத நாடு என்று எந்த நாடும் கிடையாது. முதலில் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலே இருக்க கூடாது என்று பேசி, அதற்காக இந்திய அளவில் பெரிய போராட்டத்தை நடத்தினார். ஆனால் இன்று அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. எனவே ஊழலை ஒழிப்பேன் என்று விஜய் சொல்வது வெறும் வெத்து கோஷம். இதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பா.ஜ.க.வின் தூண்டலில் செயல்படுபவராகத்தான் விஜயை பார்க்கின்றேன். முதலில் எச்.ராஜா ஜோசப் விஜய் என்று பேசி கடுமையாக விமர்ச்சித்திருந்தார். மதவாதத்தால் மணிப்பூர் எரிந்தது. இந்தியாவில் இன்னும் பல இடங்களில் மதவாத பிரச்சனை இருக்கிறது. இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பது பாயாசமா? பாசிசம் பற்றிய புரிதல் இல்லாமல் அதை எதிர்ப்பவர்களை பாயாசம் என்று கேலி செய்திருக்கிறார்.
திராவிட சிந்தனைகளை ஒழிக்க பா.ஜ.க. பல வழிகளில் போராடி தோல்வி அடைந்த பிறகு பிரபலமான சினிமா நடிகரை இயக்க தொடங்கியிருக்கிறது. இன்னும் காலங்கள் இருக்கிறது அதற்குள் விஜய் கண்டிப்பாக அம்பலப்படுவார். எதிரி யார் என்பதை சொல்லாமல் எனக்கு என்ன பயமா... தயக்கமா... என்று விஜய் சொல்கிறார். ஆனால் கடைசி வரை பெயர் சொல்லவில்லை. கொள்கை ரீதியாக பா.ஜ.க. எதிரி என்றால் அதை விஜய் தைரியமாக பேசியிருக்க வேண்டும். பிளவு வாதம் பற்றிய விளக்கத்தை வள்ளுவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன விஷயம். அதை விஜய் புரிய வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த பிளவு வாத சத்தி யார் என்பதை விஜய் சொல்லாதது ஏன்? தி.மு.க.வை திராவிட மாடல் ஆட்சி என்று பேசியதுபோல பா.ஜ.க. பெயரைகூட சொல்லவில்லை.
பா.ஜ.க.வுக்கு கொள்கை ரீதியில் எந்த பிடிப்பும் இல்லை. திராவிட சித்தாந்தங்களை தூக்கிப் பிடிக்கும் கட்சிகளுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்திருக்கிறது. 1980-களில் பட்டியலின மக்கள் வாக்கு வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. டாக்டர் அம்பேத்கரை தூக்கி பிடித்தனர். அதே போல் தந்தை பெரியாரை தூக்கி பிடித்து கடவுள் மறுப்பை விஜய் பேசினார். அதனால் நிச்சயமாக பா.ஜ.க. அவரை அரவணைக்கும். நிச்சயமாக விஜய் 2026-ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பார். நாம் தமிழர் கட்சிக்கு இது மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மிகவும் வலுவாக இருக்கிறார். அதனால் விஜய் பேசிய ஆட்சி அதிகார பங்கு வெறும் நூல் விட்டு பார்ப்பதுதான். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இதுவரை ஏற்கப்படாத ஒன்று அது இனிமேலும் தொடரும் என்பது என்னுடைய கருத்து.
இளைஞர்கள் பட்டாளம் விஜய் பின்னாடி செல்வதால் தி.மு.க.விற்கும் ஓரளவிற்கு பாதிப்பு வரும். அந்த விதத்தில் உதயநிதியின் செயல்பாடுகள் கூர்மையாக கவனிக்கப்படும். ஆளும் கட்சி செய்த செயல் திட்டங்களை மக்கள் கவனித்து வருகின்றனர். அதனால் விஜய் கண்டிப்பாக எம்.ஜி.ஆராக ஆகமுடியாது. அ.தி.முக விஜய்யுடன் ஒத்துப்போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் கூட்டணி வைக்கும் அளவிற்கு தனது வாக்கு சதவிகிதத்தை விஜய் இன்னும் நிரூபிக்கவில்லை. விஜயகாந்துக்கு கூடிய கூட்டத்திற்கு அவரே 10 சதவிகித வாக்கு எண்ணிக்கைதான் பெற்றார். அதன் பிறகுதான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார். அதனால் தன்னுடைய வாக்கு சதவிகிதத்தை விஜய் காட்டினால்தான் அ.தி.மு.க. கூட்டணி வைக்கும். இல்லையென்றால் விஜய் சொன்ன ஆட்சி அதிகார பங்குக்கு அ.தி.மு.க. ஒத்துபோவது சந்தேகம்தான்.