கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த வழக்கில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பது கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய சூழலில் தான் ஊழல் தடுப்புச் சட்டம் 1998 சட்டத்தில் 17வது பிரிவு மற்றும் புதிதாக தற்பொழுது அமலுக்கு வந்திருக்கும் பாரதிய நாகரிக் சுரக் ஷா சம்ஹிதா வழக்கின் சட்டப் பிரிவின் 218வது பிரிவு என இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் சித்தராமையாவை விசாரிக்க அம்மாநிலத்தின் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கி இருந்தார். இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மைசூர் லோக் ஆயுக்தா போலீசார், முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையும் நடத்தி வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (மூடா) தலைவர் கே மாரிகவுடா கடந்த 16ஆம் தேதி தனது பதவியை (16.10.2024) ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் முடா நிலமோசடி வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் அயுக்தா போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் லோக் ஆயுக்தா அலுவலகத்தில் சித்தராமையாவிடம் நவம்பர் 6ஆம் தேதி (06.11.2024) விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி லோக் ஆயுக்தா போலீஸார் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.