ரீமால் புயல் காரணமாக மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கனமழை பொழிந்தது. இதனால் அங்குள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்த்தில் முதற்கட்டமாக 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இடிபாடுகளில் சிக்கிய 6 பேரை மீட்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக கல்குவாரி சரிந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிசோரம் மாநிலம் ஐஸ்வால் அருகே கல் குவாரி இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன் உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் வெற்றியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.