புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போனார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், சிறுமி ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (05.03.2024) கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து துப்பு துலக்கும் விதமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழு பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்துள்ளது.
சிறுமியைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை காவடி குப்பம் சிவாஜி சாலை பகுதியில் கருப்பு சட்டை அணிந்து ஒன்றுகூடிய இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் சிறுமியின் புகைப்படம் பொறித்த பதாகையை ஏந்தி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு 20 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்திருந்தது. முன்னதாக சிறுமியின் பெற்றோர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். அதே நேரத்தில் சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் ரங்கசாமியின் உறுதிமொழியை அடுத்து புதுசேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்த நிலையில், உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை கால்கள் முறிக்கப்பட்டு இருக்கிறது. கன்னங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கையின்படி பார்த்தால் சிறுமி பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி இருப்பது அம்பலம் ஆகியுள்ளது. இந்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய இரண்டு பேர் மற்றும் சந்தேக வட்டத்தில் உள்ள ஐந்து பேர் என மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விவேகானந்தன்(59), கருணாஸ் (19) தவிர மற்ற ஐந்து பேர் தங்களுக்கும் இந்த வழக்கிற்கும எந்த சம்பந்தமும் இல்லை என தற்போது வரை தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம் அந்த பகுதி மக்கள் தரப்பில் அந்த ஏழு பேரும் குற்றவாளிகள்தான். நீங்கள் தண்டியுங்கள், இல்லை என்றால் எங்களிடம் ஒப்படையுங்கள் நாங்கள் தண்டனை கொடுக்கிறோம் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மீதமுள்ள ஐந்து நபர்களின் குதிகால் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரி, சிறுமியின் உடலில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரியும் ஒரே மாதிரியாக இருக்கிறதா இல்லையா என்று உறுதி செய்வதற்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனை முடிவில் ரத்தம் ஒன்றாக இருந்தால் இவர்கள் ஐந்து பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி அரசு ஐபிஎஸ் கலைவாணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. அந்த சிறப்பு புலனாய்வு குழுவே இனிமேல் இந்த வழக்கை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த சிறப்பு புலனாய்வு குழு இன்று காலை முதல் விசாரணையை தொடங்கியுள்ளது.