மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் 20ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று (23.11.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற பட்சத்தில், இன்று (23-11-24) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகள் 231 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி 51 இடங்களில் மட்டுமே முன்னிலை வருகிறது. அதிலும் குறிப்பாக, பா.ஜ.க 78 இடங்களில் வெற்றி பெற்றும் 55 இடங்களில் முன்னிலை வகித்தும் வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பா.ஜ.க தலைமையிலான மகா யுதி கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
இந்த தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் எம்.பியாக இருக்கும் சந்திரசேகர் ஆஷாத் நடத்தி வரும் கட்சி சார்பில், பிரபல தொலைக்காட்சி நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான், மும்பையில் உள்ள வர்சோவா தொகுதியில் போட்டியிட்டார். இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 56 லட்சம் பாலோயர்களை வைத்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வர்சோவா தொகுதியில் போட்டியிட்ட அஜாஸ் கான், வெறும் 155 வாக்குகள் மட்டும் பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 56 லட்சம் பாலோயர்கள் வைத்திருக்கும் அஜாஸ் கான், சட்டமன்றத் தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பது குறித்து பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.