உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும், வழக்கு விசாரணையை விரைவு நீதிமன்றம் விசாரிக்கவும் முதல்வர் அணையிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, "தன்னிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பெண்ணை வன்கொடுமை செய்து கொன்றது யாராக இருந்தாலும் தப்பிவிட மாட்டோம்" என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவிற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் உள்துறை செயலர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 14- ஆம் தேதி கூட்டு வன்கொடுமைக்கு ஆளான பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய் கிழமை உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.