ஹத்ராஸ் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என நான் உறுதி தருகிறேன் என பாஜக மூத்த தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்கு போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவத்சவா, "சம்பவம் நடந்த நாளன்று அந்த பெண்தான் அந்த பையனைக் குறிப்பிட்ட தினை வயலுக்கு அழைத்திருக்க வேண்டும். ஏன் என்றால் அவர்கள் இருவருக்கும் முன்பே உறவு இருந்திருக்க வேண்டும். இதனால்தான் அந்தப்பெண் பிடிபட்டிருக்க வேண்டும். இந்த மாதிரி பெண்கள் எல்லாம் ஏன் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறார்கள்?
அவர்கள் பொதுவாக கரும்பு, சோளம் மற்றும் தினை வயல்கள் அல்லது புதர்கள், காடுகளில்தான் கண்டெடுக்கப்படுவார்கள். அவர்கள் ஒரு போதும் அரிசி அல்லது கோதுமை வயல்களில் பிணமாகக் கண்டெடுக்கப்படுவதில்லை? ஏன் என்றால் அரிசி மற்றும் கோதுமை பயிர்கள் மூன்று அல்லது நான்கு அடிகள்தான் வளரும். கரும்பு மற்றும் சோள வயல்களில் தான் ஒரு ஆள் மறைந்து கொள்ளும் அளவிற்கு இடம் உள்ளது. இந்த மாதிரி சம்பவங்கள் நடந்ததற்கோ அல்லது குற்ற சம்பவம் நடந்த இடத்திலிருந்து பிணம் இழுத்து செல்லப்பட்டதற்கோ சாட்சிகள் எதுவும் இல்லை.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அப்பாவிகள் என்பதற்கு நான் உறுதி தருகிறேன். அவர்கள் சரியான நேரத்தில் விடுதலை செய்யப்படவில்லை என்றால், அவர்கள் மனரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள்" எனத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனக் கருத்துக்கள் எழுந்துவரும் நிலையில், பாஜக மூத்த தலைவரின் இந்த கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.