இந்தியாவில் கரோனா பரவல் சில மாநிலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் ஒமிக்ரான் பாதிப்பு நாட்டில் அதிகரித்து வருவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், ஜனவரி 10 முதல் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இந்தநிலையில் இன்று இந்தியாவில் மேலும் இரண்டு கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயோலொஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கும், சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கும் இன்று அவசரகால அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நோவாவாக்ஸ் மருந்து நிறுவனம் தயாரித்து வரும் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் கோவோவாக்ஸ் என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்திருந்தது. கோவோவாக்ஸ் தடுப்பூசியை சிறுவர்களுக்கும் செலுத்தலாம் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த இரண்டு தடுப்பூசிகளை தவிர மோல்னுபிரவீர் என்ற மாத்திரைக்கும் அவசரகால அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரை கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பயன்படுத்தப்படவுள்ளது. ஆனால் இந்த மோல்னுபிரவீர் மாத்திரை அனைத்து கரோனா நோயாளிகளுக்கும் அளிக்கப்படமாட்டாது. கரோனா தொற்று யாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறதோ அவர்களுக்கு, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.