
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தங்கு தடையின்றி முறையாக மணல் கிடைப்பதை உறுதி செய்வது, மாநில அரசின் வருவாயைப் பெருக்குவது, கட்டுமானவிலையை குறைப்பது, மணல் கொள்ளையை தடுப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மணல் குவாரிகள் பொதுப் பணித் துறை மூலம் இயக்கப்படுகின்றன. எந்த நோக்கத்திற்காக மணல் குவாரிகள் இயக்கப்படுகிறதோ அந்த நோக்கமே முற்றிலும் சிதையும் அளவுக்கு தி.மு.க.வின் அராஜகம் கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கிறது. மணல் கொள்ளையை தட்டிக் கேட்டாலோ அல்லது மணல் கொள்ளை தொடர்பாக புகார் அளித்தாலோ, அவர்கள் கொல்லப்படுகிறார்கள். இதற்கு பல உதாணரங்களைக் கூறலாம்.
தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான உப்பளங்களுக்கு முள்ளக்காடு கடற்கரையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் எடுக்கப்பட்டு உப்பளங்களுக்கு சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த விற்பனையில் ஆளும் தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளதால், வருவாய்த் துறை அதிகாரிகள் இதனைக் கண்டு கொள்வதில்லை என்றும், ஒரு லோடு லாரி மணல் ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், வருவாய்த் துறையினர் புகார் அளிக்க மறுப்பதால், காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒருபுறம் என்றால், மறுபுறம், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோயிலூர் அடுத்த முடியனூர் தென் பெண்ணை ஆற்றில் இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பல மீட்டர் ஆழத்திற்கு மணல் தோண்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாகவும், மணலூர்பேட்டை அடுத்த சித்தப்பட்டினம் ஏரியில் பட்டப் பகலில் பொக்லைன் இயந்திரம் மூலம் கிராவல் மண் தோண்டப்பட்டு லாரிகளில் கடத்தப்படுவதாகவும், இந்த நிலை நீடித்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் என்றும், இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை என்றும், மாறாக புகார் கொடுத்தவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் இதுதான் நிலைமை.
தி.மு.க. அரசின் மணல் கொள்ளை ஊக்குவிப்புக் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, அரசுக்கு வர வேண்டிய வருமானமும் மடைமாற்றி விடப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், தமிழ்நாடு வெகு விரைவில் பாலைவனமாக மாறிவிடும். கிராம மக்கள் குடிநீருக்கு திண்டாட வேண்டி வரும். மணல் கொள்ளை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. கிராம மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், முதல்-அமைச்சர் அவர்கள் மணல் கொள்ளைப் பிரச்சனையில் தனிக் கவனம் செலுத்தி, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார்.