
இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக கோவா உள்ளது. இங்கு பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். கோடை காலங்களில் வெயிலில் தாக்கம் இருக்கும் வேளைகளில், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கோவாவிற்கு சென்று உடல் சூட்டை தணிப்பார்கள்.
இந்த நிலையில், கடற்கரை குடில்களில் இட்லி - சாம்பார் விற்பனையால் சுற்றுலாப் பயணிகள் குறைந்து வருவதாக பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். கோவா மாநிலத்தில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. வடக்கு கோவாவின் ஒரு பகுதியில், பா.ஜ.க எம்.எல்.ஏ மைக்கேல் லோபா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “கடலோர மாநிலத்திற்கு குறைவான வெளிநாட்டினர் வருகை தந்தால் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்ல முடியாது. ஏனெனில் அனைத்து பங்குதாரர்களும் சமமாக பொறுப்பாவார்கள். கோவா மக்கள், தங்கள் கடற்கரை குடில்களை மற்ற இடங்களிலிருந்து வரும் தொழிலதிபர்களுக்கு வாடகைக்கு விடுகின்றனர்.
பெங்களூரைச் சேர்ந்த சிலர், குடில்களில் ‘வடா பாவ்’ பரிமாறுகிறார்கள், சிலர் இட்லி-சாம்பார் விற்கிறார்கள். அதனால்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத்தில் சர்வதேச சுற்றுலா குறைந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலோரப் பகுதியில், அது வடக்கு அல்லது தெற்கு என எதுவாக இருந்தாலும், வெளிநாட்டுப் பார்வையாளர்களின் வருகையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கு, பங்குதாரர்களாகிய அனைவரும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
ஆண்டும் சில வெளிநாட்டினர் கோவாவிற்கு வருகை தருகின்றனர். ஆனால் வெளிநாட்டிலிருந்து வரும் இளம் சுற்றுலாப் பயணிகள் மாநிலத்தை விட்டு விலகிச் செல்கின்றனர். சுற்றுலாத் துறையும் பிற பங்குதாரர்களும் ஆலோசனை நடத்தி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்கு வரத் தயாராக இல்லாததற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்கு வருவதை நிறுத்திவிட்டனர். சுற்றுலா தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை, வாடகை கார் நிறுவனங்களுக்கும் உள்ளூர் சுற்றுலா டாக்ஸி நடத்துநர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் உட்பட அனைத்து பிரச்சனைகளையும் மாநிலம் தீர்த்து வைக்க வேண்டும். நாம் ஒரு அமைப்பை ஏற்படுத்தவில்லை என்றால், சுற்றுலாத் துறையில் இருண்ட நாட்களைக் காண்போம்” என்று கூறினார்.