
கர்நாடகாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு கன்னடத்தில் பெயர் வைக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அரசு, மாநில அரசு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, ‘ கர்நாடகா மாநிலத்திற்குள் அரசு மற்றும் தனியார் துறைகளில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து தொழில்துறை மற்றும் நுகர்வோர் பொருட்களிலும், பயன்படுத்துவதற்கான பெயர்கள் மற்றும் வழிமுறைகள் பிற மொழிகளுடன் கன்னடத்திலும் கட்டாயமாக அச்சிடப்பட வேண்டும் என்று இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
கன்னட மொழி விரிவான மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அமலாக்க அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தொழில்துறை மற்றும் நுகர்வோர் பொருட்களின் உற்பத்தியாளர்களும் இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும். மொழி, அந்த நிலத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மதிப்புகளைப் பிரதிபலிக்கிறது. ஒரு மொழி செழிக்க, உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் வணிக நடவடிக்கைகள் உள்ளூர் மொழியில் நடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னட மொழியின் விரிவான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், கன்னட மக்களுக்கு வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் சிறந்த வாய்ப்புகளை வழங்குவதற்கும், கடந்தாண்டு கன்னட மொழி விரிவான மேம்பாட்டுச் சட்டத்தை கர்நாடகா அரசு அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.