
ஈரம் படத்தில் தண்ணீரை ஒரு கான்செப்ட் ஆக வைத்து அதன்மூலம் பழிவாங்கும் பேய் என வித்தியாசமான பேய் படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க செய்த இயக்குநர் அறிவழகன் பல ஆண்டுகள் கழித்து இந்த முறை சப்தத்தை வைத்து ஒரு பேய் படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த சப்தம் ஹாரர் திரைப்படம் ஈரம் பெற்ற அதே வரவேற்பை பெற்றதா, இல்லையா?
மூணாறு பகுதியில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஹாஸ்டலில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இரண்டு பெண்கள் ஒரு ஆண் கொடூரமாக இறந்து கிடக்கின்றனர். இந்த கொலைகளுக்குக் காரணம் அங்கு சுற்றி இருக்கும் அமானுஷ்ய பேய் என நினைக்கும் கல்லூரி நிர்வாகம் மும்பையில் இருக்கும் சப்தம் மூலம் பேய்களை ஆராய்ச்சி செய்யும் பேய் நிபுணர் ஆதியை வரவழைக்கின்றனர். இவர் தன்னுடைய கருவிகளை வைத்துக்கொண்டு பேய்களை ஆராய்ச்சி செய்து உண்மையில் அங்கு பேய் இருக்கிறதா? இல்லையா? அப்படி இருந்தால் அவை எதற்காக இப்படி செய்கிறது? அதிலிருந்து எப்படி தீர்வு காண்பது? என அந்த கல்லூரியில் பேய் வேட்டையை ஆரம்பிக்கிறார்.

இவர் பேய் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நான்காவதாக ஒரு பெண் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அப்பொழுது அந்த கொலைக்கும் நாயகி லட்சுமிமேனனுக்கும் இருக்கும் தொடர்பை கண்டுபிடிக்கிறார். இதைத் தொடர்ந்து லட்சுமிமேனனுக்கும் அந்த பேய்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இந்த கொலைகளுக்கான காரணம் என்ன? இதற்கான தீர்வுகள் என்ன? யார் இந்த கொலைகளை செய்வது போன்ற கேள்விகளுக்கு விடையாக இந்த சப்தம் ஹாரர் திரைப்படம் அமைந்திருக்கிறது.
இயக்குநர் அறிவழகன் இந்த முறையும் ஒரு ஹாரர் படத்தை ரசிக்கும்படி கொடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார். சத்தத்தை வைத்து பேய்களை எப்படி கண்டுபிடிப்பது அதற்கான டெக்னாலஜிகல் என்ன போன்ற விஷயத்தை தன் ஆராய்ச்சி மூலம் சரியாக கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் திரைக்கதைக்குள் அதை உட்புகுத்தி அவை ரசிக்கும் படியும் அமைக்கச் செய்து ஒரு கிரிப்பிங் ஆன பேய் படம் பார்த்த உணர்வை இப்படத்தின் மூலம் கொடுத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல பேய் படம் பார்த்த உணர்வை இந்த சப்தம் கொடுத்திருக்கிறது. முதல் பாதி சற்றே மெதுவாக நகர்ந்து கதைக்குள் செல்ல சற்றே அயர்ச்சி ஏற்படும்படி இருந்தாலும் இன்டெர்வலில் இருந்து ஆரம்பிக்கும் திரைப்படம் போகப்போக வேகம் எடுத்து இறுதி கட்ட காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்து சிறப்பான பேய் படமாக முடிகிறது.

இப்படத்தின் முக்கிய பிளஸ்ஸாக பார்க்கப்படுவது படத்தின் மேக்கிங், டெக்னிக்கலான விஷயங்களை சிறப்பாக கையாண்டதும் தான். படத்தை ஹாலிவுட் தரத்தில் இயக்கி அதற்கு ஏற்றார் போல் மேக்கிங் செய்து பார்ப்பவர்களுக்கு சிறப்பு சத்தங்கள் மூலம் நல்ல பரவசம் மட்டும் எக்ஸ்பீரியன்ஸ் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அறிவழகன். குறிப்பாக நல்ல சவுண்ட் டெக்னாலஜி இருக்கும் திரையரங்கில் இப்படம் பார்க்கும் பட்சத்தில் ஒரு பரவசமான உணர்வு கண்டிப்பாக இப்படம் கொடுக்கும்.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஆதி அவ்வப்போது தமிழுக்கும் வந்து சென்று கொண்டு தான் இருக்கிறார். மரகத நாணயம் படத்திற்குப் பிறகு இந்த சப்தம் படம் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி இருக்கிறார். பேய் படங்களுக்கு என்றே அளவெடுத்து தைத்த சட்டையைப் போல் அந்த கதாபாத்திரமாகவே அப்படியே மாறி விடுகிறார் நடிகர் ஆதி. சப்தத்தை வைத்து இவர் பேய்களை உணரும் காட்சிகள் அதற்கு தீர்வு காணும் காட்சிகள் என ஒவ்வொரு காட்சிக்கு ஏற்றார் போல் ஒவ்வொரு எக்ஸ்பிரஷன்கள் மற்றும் வசன உச்சரிப்பு என நடிப்பில் பல்வேறு பரிமாணங்களைக் காட்டி படத்திற்கு சிறப்பான பங்களிப்பு அளித்திருக்கிறார்.

வழக்கமான நாயகியாக வரும் லட்சுமிமேனன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார். இவருக்கு படத்தில் பெரிதாக ஸ்கோப் இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் சிறப்பு சேர்த்து இருக்கிறார். ஆதி நண்பராக வரும் விவேக் பிரசன்னா சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். அதேபோல் முக்கிய பாத்திரத்தில் வரும் எம்.எஸ் பாஸ்கர், ராஜீவ் மேனன், லைலா ஆகியோர் சிறிது நேரங்களில் படத்தில் தோன்றினாலும் அவரவர் வேலையை மிகச் சிறப்பாக செய்து காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்ரன் பரிதாபம் ஏற்படும்படியான கதாபாத்திரத்தில் நடித்து அனுதாபத்தை அள்ளி இருக்கிறார். இவருக்கும் பேய்களுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரெடீன் கிங்ஸ்லி கடமைக்கு காமெடி செய்திருக்கிறார் சிரிப்பு வருகிறதா என்றால் சந்தேகமே. மற்றபடி உடனடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அவரவர் வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர்.
தமன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மிரட்டி இருக்கிறது. குறிப்பாக இந்த படம் சப்தம் சம்பந்தப்பட்ட படமாக இருப்பதால் இவரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நல்ல சவுண்ட் டெக்னாலஜி இருக்கும் திரையரங்கில் இப்படத்தை பார்க்கும் பட்சத்தில் புதுவித அனுபவத்தை கொடுக்க இவரது இசை உதவி இருக்கிறது. அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில் பல காட்சிகள் பகலிலேயே காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் அவை மங்களாகவும் சற்று எக்ஸ்போசர் குறைவாக இருப்பதால் திகில் கொடுக்கும் இடங்களுக்கெல்லாம் அவை நன்றாக உதவி இருக்கிறது. பேய்களுக்கு என்று சிறப்பான காட்சி அமைப்புகளை அளவாக மற்றும் அழகாக கையாண்டிருக்கிறார். இவரது ஒளிப்பதிவு படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது.
ஈரம் படத்தில் எந்த மாதிரியான ஒரு பேய் உணர்வு நமக்குள் ஏற்பட்டதோ அதேபோன்ற ஒரு உணர்வை இப்போது உள்ள டெக்னாலஜியை வைத்து சப்தம் மூலம் சிறப்பாக கையாண்டு ஒரு நல்ல ஹாரர் படம் பார்த்த உணர்வை இந்த சப்தம் திரைப்படம் கொடுத்திருக்கிறது. முதல் பாதி சற்றே ஸ்டேஜிங்குக்கு டைம் எடுத்துக் கொண்டாலும் இன்டெர்வெலில் இருந்து ஆரம்பிக்கும் திரைப்படம் இறுதிவரை பரபரப்பாக சென்று புதுவித உணர்வை ஏற்படுத்தக்கூடிய பரவசமான பேய் படமாக அமைந்திருக்கிறது.
சப்தம் - காதுகளுக்குள் திகில்!