Skip to main content

“தாரை வைத்து அழிப்பதால் இந்தி மொழி அழியப்போவது இல்லை” - சரத்குமார்

Published on 01/03/2025 | Edited on 01/03/2025

 

 Sarathkumar said Hindi language will not be destroyed

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார், “இந்தியைத் திணிக்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் நீங்கள், தமிழை வளர்க்க என்ன செய்தீர்கள்? காந்தி ஆரம்பித்த இந்தி பிரச்சார சபாவில் 3 லட்சம் பேருக்கும் மேல் படித்து தேர்ச்சி பெற்று வருகின்றனர். அதே போன்று நாம் தமிழுக்காக என்ன செய்தோம்? நீங்கள் தாரை வைத்து இந்தியை அழிப்பதால் இந்தி அழியப்போவது இல்லை; அதேபோன்று தமிழை ஒருபோதும் அழிக்க முடியாது. 4,500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தமிழ் மொழியை எப்படி அழிக்க முடியும்? 

200 ஆண்டுகள் அடிமையாக வைத்திருந்த ஆங்கிலேயரின் மொழியை நாம் கற்றுக்கொள்வோம்; ஆனால், 70 கோடி மக்கள் பேசும் இந்திய மொழியான இந்தியைக் கற்றுக்கொள்ள கூடாது என்று கூறுகிறீர்கள். அதுமட்டுமில்லாமல் மும்மொழி கொள்கையில் அவர்கள் இந்தியைத் திணிக்கவில்லை. இந்திய மொழி எதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் கூறுகின்றனர். மொழி கற்றுக்கொள்வதால்  உனடடியாக ஒரு இணக்கம் ஏற்படுகிறது..” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்